சீனாவிடம் இருந்து வாங்கிய பாண்டா கரடிகளை மூங்கில் பற்றாக்குறையால் சீனாவுக்கே திருப்பி அனுப்பும் கனடா…

கொரோனா ஊரடங்கின் காரணமாக கனடாவில் ஏற்பட்டுள்ள மூங்கில் தட்டுப்பாட்டால் 2 பாண்டா கரடிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்புகிறது கனடா.
 
கனடா மற்றும் சீனா ஆகிய இரு நடுகளுக்கு இடையிலான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் படி கடந்த 2014-ம் ஆண்டு சீனாவில் இருந்து 2 பாண்டா கரடிகள் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கரடிகளுக்கு எர் ஷைன் மற்றும் டா மாவோ என்று பெயரிடப்பட்டது.  இந்த 2 பாண்டா கரடிகளும் கனடாவின்  டொரோண்டோவில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 ஆண்டுகளை கழித்தன. அதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியில் கல்காரி உயிரியல் பூங்காவுக்கு இந்த பாண்டா கரடிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டன. இந்த 2 பாண்டா கரடிகளும் மூங்கில்களை விரும்பி சாப்பிடும். ஒவ்வொரு பாண்டா கரடியும் நாள் ஒன்றுக்கு சுமார் 40 கிலோ வரை மூங்கில்களை உணவாக எடுத்துக்கொள்ளும் என உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறுகிறது.
 
பாண்டா கரடிகளுக்காக சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் மூங்கில்கள் கொண்டு வரப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கனடா-சீனா இடையிலான விமானப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் பாண்டா கரடிகளுக்கு மூங்கில் கிடைக்காமல் போனது. வேறு வழிகளில் மூங்கில்களை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சி  பலனளிக்கவில்லை. எனவே அந்த 2 பாண்டா கரடிகளையும் சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.எனவே இந்த கரடிகளை திருப்பி அனுப்ப  உயிரியல் பூங்கா நிர்வாகம் அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
author avatar
Kaliraj