ஆக்சிஜன் பற்றாக்குறை – மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக கடந்த 25 மணி நேரத்தில் மட்டும் 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனராம்.

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதிலும் தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடீரென கொரோனா வைரஸின் வீரியம் மீண்டும் அதிகரித்ததால் பல்வேறு மாநில அரசுகள் தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெறும்  நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு திணறி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு பணம் படைத்த தொழிலதிபர்கள் இதற்காக உதவி வந்தாலும், பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் குறைவாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷடோல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் சப்ளை பற்றாக்குறை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகத்தான் தங்கள் உறவினர்கள் உயிரிழந்துள்ளதாக கூறினாலும், மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும் அவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் இருந்த நோயாளிகள் தான் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal