ஆக்சிஜன் உற்பத்தி ; உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் இன்று ஆலோசனை..!

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சகட்டத்தை எட்டியது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.மேலும்,  மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதனையடுத்து,ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில்,கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.ஆனால்,சில வெளிநாடுகளில் கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.

இந்நிலையில்,நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது  குறித்து பிரதமர் நரேந்திர மோடி,உயர் மட்டக் குழுவுடன் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்,கொரோனா மூன்றாவது அலை வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.