நம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் – சத்குரு..!

”நாம் எதை செய்தாலும், அந்த செயலால் நாட்டுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும்” என்ற உணர்வுடன் அனைவரும் செயல்புரிய வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். நம் பாரத தேசம் 72 ஆண்டுகளாக மட்டுமின்றி, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவே கலாச்சாரத்தின் தேசமாக வளர்ந்து வந்துள்ளது. இது வெறும் பிழைப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட கலாச்சாரம் கிடையாது. அதேபோல், மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆக்கிரமிக்கும் கலாச்சாரமும் கிடையாது.

பாரத கலாச்சாரம் ஆன்மீகத்தில் ஊறி வளர்ந்த கலாச்சாரம். நமக்கு சொர்க்கத்திற்கு போகும் ஆசை இல்லை. நமக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. நாம் எப்போது உண்மை தேடுதலில் இருக்குகிறோம்.

இந்த 72-வது குடியரசு தினத்தில் நாம் அனைவரும் ஒரு உறுதி எடுத்து கொள்ள வேண்டும். நாம் எந்த செயல் செய்தாலும் அதனால் நம் நாட்டிற்கு நன்மை விளையுமா, விளையாதா என்பதை கவனத்தில் வைத்து செயலாற்ற வேண்டும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், நாம் இளமையான நாடாக இருக்கிறோம். மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 30 வயதிற்கு கீழ் இருக்கின்றனர். ஆகவே, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் மகத்தான மாற்றம் கொண்டு வரும் வாய்ப்பு நம்மிடம் உள்ளது. மக்களின் வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களை கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளது.

இந்த வாய்ப்பு பாழாய் போகாமல் இருக்க வேண்டுமென்றால், பாரத நாட்டில் இருக்கும் எல்லா குடிமக்களும் இந்த உறுதியை ஏற்க வேண்டும். நாம் எதை செய்தாலும் அந்த செயலால் நாட்டுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்ற உணர்வுடன் செயலாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் நம் நாடு ஒரு பவ்ய பாரதமாக உருவெடுக்கும் இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

author avatar
murugan