நம்பிக்கை இல்லா தீர்மானம்.! மணிப்பூர் செல்லும் இந்தியா கூட்டணி.!

வரும் 29ஆம் தேதி இந்தியா கூட்டணி சேர்ந்த அரசியல் தலைவர்கள் மணிப்பூர் செல்ல உள்ளனர். 

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர். மேலும், அண்மையில் இரு பெண்களை ஆடையின்றி ஒரு கொடூர கும்பல் இழுத்து சென்ற வீடியோ, கூட்டு பாலியல் பலாத்கார செய்திகள் என மணிப்பூர் பற்றி வெளியான தகவல்கள் நாட்டையே உலுக்கியது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க கோரியும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும் தொடர்ந்து 6வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவியேற்றியுள்ளனர். இது தொடர்பான விவாதம் அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மணிப்பூர் செல்ல உள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலைமையை அறிந்து கொள்ள உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மணிப்பூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்ய உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிக்கையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கான ஆதாரங்களை சேகரிக்கவும் எதிர்க்கட்சி தலைவர்கள் மணிப்பூர் செல்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி மணிப்பூர் சென்றாலும், அவரால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பகுதிக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.