இனி இ-பாஸ் தேவையில்லை – புதுச்சேரி அரசு

புதுச்சேரிக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென  எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே நேற்று  அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் எழுதினார்.அவரது கடிதத்தில்,  மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவையில்லை.மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுகிறது. பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை கூடாது.மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.