“திருப்பதி பெருமாள் வேடம் அணிந்த நித்தியானந்தா”…! பெருமாள் பக்தர்கள் கடும் எதிர்ப்பு…!

கைலாச நாட்டின் அதிபரான நித்தியானந்தா, தற்போது திருப்பதி பெருமாள் போன்று சங்கு,சக்கரம், நகைகள் மற்றும் மின்னும் கிரீடம் போன்றவை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதற்கு பெருமாள் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் பிடடி ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா,அடிக்கடி பாலியல்,கொலை போன்ற பல்வேறு வழக்குகளில் சிக்கினார்.2010ம் ஆண்டு,நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்து வந்த ரகசிய சிசிடிவி வீடியோ மர்ம நபர் ஒருவரால் தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.அதன்பின்னர், நித்தியானந்தா மக்களிடையே பெரிதும் பிரபலமானார்.இதனைத்தொடர்ந்து, அகமதாபாத் பாலியல் வழக்கில் நித்தியானந்தா முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அகமதாபாத் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.இதனால் தலைமறைவான நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறினார்.

நித்தியானந்தா, ஆஸ்திரேலியாவிற்கு சற்று அருகில் ஒரு தீவை வாங்கி கைலாசா என்று பெயரிட்டு,தன்னை அந்நாட்டின் பிரதமராக அறிவித்தார். பிறகு கைலாசா நாட்டிற்கென தனியாக ரிசர்வ் வங்கி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.மேலும்,கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று நித்தியானந்தா கைலாசா நாட்டிற்குரிய நாணயங்களை  வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில்,நித்தியானந்தா திருப்பதி பெருமாள் போன்று வேடமணிந்து புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் பக்தர்களை கைலாசா நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.மேலும்,”பக்தர்கள் கைலாசா நாட்டின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இ-பாஸ்போர்ட்டை இலவசமாகப் பெற்றுக்கொண்டு,கைலாசாவிற்கு வருமாறும் ,உலகில் உள்ள ஒரே இந்து நாடான கைலாசாவை ஆதரிக்க வேண்டும்”,என்றும்  கூறியுள்ளார்.

நித்தியானந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு கடுமையான கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளன.மேலும்  நித்தியானந்தாவின் இத்தகைய செயலுக்கு பெருமாள் பக்தர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.