உயிருக்கு போராடும் நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ர்ன்ஸ்…!

நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

கடந்த 2000 வது ஆண்டு மற்றும் அதற்கு பின்னரான காலகட்டத்தில் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ர்ன்ஸ்,கடந்த வாரம் இதயத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மயங்கி விழுந்தார். இதனையடுத்து,அவர் சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனாலும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும்,அவருக்கு உடலின் முக்கிய தமனியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,இதனால் அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் ஆங்கில செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவரது மனைவி கூறுகையில்:”இது குடும்பத்திற்கு ஒரு கடினமான சூழ்நிலை.கெய்ர்ன்ஸ்க்கு இதய கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து,நியூசிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி டேவிட் ஒயிட் கூறுகையில்,”கெய்ர்ன்ஸின் உடல்நிலை பற்றி அறிந்து மற்ற கிரிக்கெட் சகோதரர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.கிறிஸ் மிகவும் அன்பான கணவர், தந்தை மற்றும் மகன் – மற்றும் அவர் எங்கள் சிறந்த ஆல் -ரவுண்டர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் முழுமையாக குணமடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

இதனையடுத்து,மற்ற கிரிக்கெட் நிர்வாகம்,ரசிகர்கள் என பலரும் அவர் உடல்நிலை சரியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய பேட்டிங் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன்,கிறிஸ் கெய்ர்ன்ஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

கிறிஸ்டோபர் லான்ஸ் கெய்ர்ன்ஸ் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னாள் ஒருநாள் கேப்டன் ஆவார்.கிறிஸ்,நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லான்ஸ் கெய்ர்ன்ஸின் மகன்.2000 ஆம் ஆண்டில்,அவர் ஆண்டின் ஐந்து விஸ்டன் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.200 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற ஆல்-ரவுண்டரின் இரட்டை இலக்கை எட்டிய இயன் போத்தம் மற்றும் கபில்தேவ் உள்ளிட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.

மேலும்,இவர் ஒருநாள் போட்டிகளில், 200 விக்கெட்டுகள் மற்றும் 4950 ரன்கள் எடுத்துள்ளார்.நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனையடுத்து,கெய்ர்ன்ஸ் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து 2004 இல் ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து,இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு,’இந்தியன் கிரிக்கெட் லீக்’ என்ற பெயரிலேயே டி20 போட்டிகள் நடத்தப்பட்டது.இரண்டு சீசன் மட்டுமே விளையாடப்பட்ட இப்போட்டிகளில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் சண்டிகர் லயன்ஸ் என்ற அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, போட்டிகளில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.அதற்கு பிறகு,சட்டப்படி தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.