நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட படிப்புகளுக்கான சட்ட முன்வரைவு 2017 மற்றும் தமிழக மருத்துவ மற்றும் பல்மருத்துவ மேல் படிப்புகளுக்கான சட்ட முன்வரைவு 2017  ஆகிய இரண்டில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டசபையில் தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.  இதனிடையே, 2017ம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த சட்டத்துக்கு ஒப்புதல் கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தமிழ்நாடு பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், தமிழக அரசு அனுப்பிய 2 மசோதாக்களும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மசோதாக்கள் பெறப்பட்ட தேதி மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.