மும்பை குண்டுவெடிப்பு – குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் அதிரடி கைது!

1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியும் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளருமான அபு பக்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டார்.

கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கு பிறகு (1993) மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியும் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளருமான அபு பக்கரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இந்திய பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாகக் கைது செய்துள்ளன. இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான அபு பக்கரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டியிருந்தது.

1993 குண்டுவெடிப்பின் முக்கிய சதிகாரர்களில் ஒருவரான அபு பக்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தானில் வசித்து வந்துள்ளார். அபு பக்கரின் முழுப் பெயர் அபு பக்கர் அப்துல் கஃபூர் ஷேக் என்று கூறப்படுகிறது. இவர் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் முக்கிய லெப்டினென்ட்களான முகமது மற்றும் முஸ்தபா தோசாவுடன் வளைகுடா நாடுகளில் இருந்து மும்பைக்கு தங்கம், ஆடைகள் மற்றும் மின்னணு பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் பக்கர் ஒருமுறை கைது செய்யப்பட்டார். ஆனால், சில ஆவணச் சிக்கல்கள் காரணமாக கைது செய்வதைத் தவிர்க்க முடிந்தது. 1993-ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) 12 பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் 257 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,400 பேர் காயமடைந்திருந்தனர்.

இந்தத் தாக்குதல்கள் தாவூத் இப்ராஹிம் தனது துணை அதிகாரிகளான டைகர் மேமன் மற்றும் யாகூப் மேமன் ஆகியோரின் உதவியுடன் திட்டமிட்டு ஒருங்கிணைந்து நடத்தியுள்ளார். 21 மார்ச் 2013 அன்று, உச்ச நீதிமன்றம் யாகூப் மேமனுக்கு எதிரான மரண தண்டனையை உறுதி செய்தது. மேலும் 10 பேருக்கு எதிரான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும் அதே வேளையில், பயிற்சி மற்றும் குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கியதற்காகவும், பயிற்சிக்கு நிதியளித்ததற்காகவும் தண்டிக்கப்பட்டார்.

30 ஜூலை 2015 அன்று, மகாராஷ்டிர அரசு யாகூப்பை நாக்பூர் மத்திய சிறையில் தூக்கிலிட்டது. இருப்பினும், முக்கிய சந்தேக நபர்களான தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகிய இருவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், தாவூத் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதேபோல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட டைகர் மேமன் இன்டெல் ஏஜென்சிகளின் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டார் என்றும் 61 வயதான மேமன், மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு தாவூத் இப்ராகிமிடம் உதவி கோரினார் எனவும் கூறப்படுகிறது. கராச்சியில் தாவூத் இப்ராஹிமின் குறிப்பிட்ட முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், டைகர் மேமன் கிட்டத்தட்ட கேள்விப் படாதவராகவும், கண்டுபிடிக்க முடியாதவராகவும் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான அபு பக்கரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan