தெலுங்கானாவில் தாய்-மகன் தற்கொலை வழக்கு – ஆளும் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது!

தெலுங்கானாவில் தாய்-மகன் தற்கொலை வழக்கில் ஆளும் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது என தகவல்.

தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த ராமயம்பேட்டை நகராட்சி தலைவர் ஜித்தேந்தர் கவுடுடம் கடன் வாங்கி, கங்கம் சந்தோஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் சில நாட்களிலேயே ஜித்தேந்தர் தனக்கு 50% லாப பங்கு வேண்டும் என்று கேட்டதாகவும், இதற்கு சந்தோஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். லாபத்தில் பங்கு தர மறுத்ததை அடுத்து கடந்த ஒரு வருட காலமாக நகராட்சி தலைவரும் அவரது ஆதரவாலர்களும், கங்கம் சந்தோஷையும் அவரது தாய் பத்மாவையும் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தாங்க முடியாமல் கங்கம் சந்தோஷும் அவரது தாய் பத்மாவும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த 16-ஆம் தேதி காமரெட்டி நகரில் உள்ள ஒரு லாட்ஜில் இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இதன்பின்னர் சந்தோஷ் மற்றும் அவரது தாயார் இருவரும் செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டு, வாக்குமூல கடிதமும் எழுதி, இதனை கங்கம் சந்தோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீஸார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பேஸ்புக்கில் சந்தோஷ் வெளியிட்ட வாக்குமூலத்தில், எங்களது தற்கொலைக்கு ராமயம்பேட்டை நகராட்சித் தலைவர் ஜிதேந்தர் கவுடு, அவரது ஆதரவாலர்கள் மற்றும் காவல்துறையின் துன்புறுத்தலே காரணம் என கூறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தங்களது தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று கூறி ஏழு பேரின் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை (டிஆர்எஸ்) சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் மீது போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இறந்த பிறகாவது நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அப்பதிவில் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நீதி கிடைக்க வேண்டும் என்று சந்தோஷ், பத்மா ஆகியோரின் உடல்களுடன் நகராட்சி தலைவர் ஜிதேந்தர் கவுடு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில், தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) ராமயம்பேட் நகராட்சித் தலைவர் பல்லே ஜிதேந்தர் கவுடு உட்பட 6 தலைவர்கள் தாய்-மகன் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். காமாரெட்டியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மற்றும் அவரது தாயாரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்