#Monkeypox: குரங்கு அம்மை நோய் – வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு!

குரங்கு நோய் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்டது. அதன்படி, உலகளவில் கேமரூன், மத்திய ஆப்ரிக்கா, கோட் டி ஐவரி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, காபோன், லைபீரியா, நைஜீரியா, காங்கோ குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 57 நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை நோய் 8,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குரங்கு அம்மை நோய் இந்தியாவில் நுழையாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரும் நிலையில், இந்தியாவின் முதல் குரங்கு நோய் பாதிப்பு கேரளாவில் உள்ள கொல்லத்தில் உறுதி செய்யப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பு நடவடிக்கைகளில் உதவ பல மருத்துவ குழுவை அங்கு அனுப்பியுள்ளது.

ஏற்கனவே, பீகாரைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கேரளாவைச் சேர்ந்தவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை ஒன்றாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் குரங்கு நோய் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பயணிகள் தவிர்க்க வேண்டியவை:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சர்வதேச பயணிகள் நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். தோல் புண்கள் அல்லது பிறப்புறுப்பு புண்கள் உட்பட நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். எலிகள், அணில்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட சிறிய பாலூட்டிகள் போன்ற இறந்த அல்லது உயிருள்ள காட்டு விலங்குகளுடன்  தொடர்பு கொள்ள வேண்டாம்.

காட்டு விளையாட்டிலிருந்து (புஷ்மீட்) இறைச்சியை உண்ணுதல் அல்லது தயாரித்தல் அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து காட்டு விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துதல் (கிரீம்கள், லோஷன்கள், பொடிகள்) உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்கள் பயன்படுத்தும் அசுத்தமான பொருட்களுடன் (உடை, படுக்கை அல்லது சுகாதார அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை) அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்ளுதல் கூடாது.

சொறி மற்றும் காய்ச்சல் போன்ற குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தோன்றினால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். நீங்கள் வசிக்கும் பகுதியில் குரங்கு அம்மை பாதிப்பு இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் உடனடியாக சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குரங்கு அம்மை நோய் உலக அளவில் ஆபத்தான தொற்று என்று அறிவிப்பது தொடர்பான வல்லுநர் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று WHO கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment