உழைக்கும் வர்க்கத்தினருக்காக அம்மா மினி கிளினிக் – திறந்து வைத்தார் முதல்வர்!

உழைக்கும் வர்க்கத்தினருக்காக அம்மா மினி கிளினிக் செயல்படும் என கூறி, சேலத்தில் நேற்று முதல்வர் மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில் மினி கிளினிக்குகள் திட்டம் கொண்டுவரப்படும் என அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி 1,400 கிராமப்புறங்களிலும்,   200 பெருநகர சென்னை மாநகராட்சிகளிலும், 200 நகர்ப்புறங்களிலும், 200 நகரும் கிளினிக்குகள் என மொத்தம் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டு இதற்கானவேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் 630 அம்மா மணி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம்,  வியாசர்பாடி எம்.பி.எம் தெரு, மயிலாப்பூர் கச்சேரிசாலை, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கிராமம் ஆகிய இடங்களில் முதல்வர் நேரில் சென்று ரிப்பன் வெட்டி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நேற்று தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் திறந்து வைத்துள்ளார். மொத்தம் 100 அம்மா மினி கிளினிக்குகள் சேலத்தில் துவங்கப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 34 கிளினிக்குகள் மட்டும் தற்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் பேசிய முதல்வர் காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்களால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை பயன்படுத்தி தங்களை குணப்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்கில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஏழை எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாகவும், உழைக்கும் வர்க்கத்திற்கு விவசாயி, விவசாயத் தொழிலாளர்களுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடக்க கலத்தில் கடுமையாக இருந்ததாகவும், அதனை கட்டுப்படுத்தி தற்போது இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைந்துள்ள மாநிலமாக தமிழ்நாட்டை படிப்படியாக குறைத்துக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள முதல்வர், வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்கின்ற அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal