BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு , திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக கட்சிகள் சார்பாக BC, MBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாம். என தீர்ப்பு வழங்கப்பட்டது.

BC மற்றும் MBC மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையின் போது 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை குறிப்பிடும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்  தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘ நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு பாஜக அரசு வழங்கிவந்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகம் ஓரணியில் நிற்கும். மேல்முறையீட்டை தவிர்த்து உடனே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார். மேலும், அதில், ஓர் அறிக்கையையும் அந்த ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

அதில், ‘மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் சம உரிமை உரிமை உண்டு என திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நான்கு வருடங்களாக BC, MBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடை மத்தியில் உள்ள பாஜக அரசு நிராகரித்து வந்திருக்கிறது.

திமுக சார்பில் எம்.பி வில்சன் மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேரில் மனு அளித்துள்ளார். கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளனர். நானும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம். தமிழகமே ஓரணியில் நிற்கும் வகையில் வழக்கு தொடுத்த மற்ற கட்சிகளுக்கும் எனது நன்றிகள்.

‘பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது’ என இந்திய மருத்துவ கழகத்தை விட்டு நீதிமன்றத்தில் வாதிட வைத்தது பாஜக அரசு.

சமூகநீதி போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

இருப்பினும், இந்த கல்வியாண்டே உடனடியாக 50 சதவீத இட ஒதுக்கீட்டை BC, MBC மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

மத்திய அரசு மேல்முறையீடு எதுவும் செய்யக்கூடாது என்று நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.