மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எச்சரிக்கை

மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டடத்தில் உள்ள தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட்(டிஎன்பிஎல்) ஆலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கைகள் வசதி அமைப்பது குறித்து,தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்,மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து,அமைச்சர் செந்தில் பாலாஜி மின்கட்டணம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது ,”மின் கட்டணம் செலுத்த,தேவையான கால அவகாசத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். தற்போது இரண்டு மாதங்களுக்கான,மின் கணக்கீடு முறைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நடந்த குளறுபடிகள் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக,மிகத் தீவிரமாக ஆய்வுகள் செய்து,அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக,கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில்,மின் இணைப்புகளுக்கு கூடுதல் டெபாசிட் வசூல் செய்யக்கூடாது என, மின் வாரியத்தின் மூலம் அனைத்து அலுவலகங்களுக்கும் கடந்த 10 ஆம் தேதியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதனை மீறி,மின் இணைப்புகளுக்கு கூடுதல் டிபாசிட் வசூல் செய்தால், மின் துறை சார்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல்,தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட, இரண்டு மாத மின் கணக்கீட்டை ஒரு மாதமாக மாற்றுவது குறித்து, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்”,என்று கூறினார்.