தேர்தல் பணி… மேற்கு மண்டல பிரதிநிதியாக களமிறங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நாடளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பல்வேறு பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது குறித்து பிரதான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், சில கட்சிகள் தேர்தல் பணி குழுவை அமைத்து அறிவித்து வருகிறது.

அந்தவகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று திமுக சார்பில் தேர்தல் குழு அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஒருங்கிணைப்பு குழு, தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு, அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்…. திமுக சார்பில் தேர்தல் பணி குழு அறிவிப்பு!

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கே.என்.நேரு தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள, திமுகவின் மேற்கு மண்டல பிரதிநிதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குகிறார். இந்த ஒருங்கிணைப்பு குழுவில் மண்டலத்துக்கு ஒருவர் என அமைச்சர்கள் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.

அதன்படி, வடக்கு மண்டலத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, தெற்கு மண்டலத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று, டெல்டா மண்டலத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மண்டலத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி என தேர்தல் ஒருங்கிணைப்பு குழு செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, திமுக தேர்தல் பணிக்குழு குறித்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், தொடங்கியது நாடாளுமன்ற தேர்தல் பணி, பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்! இந்தியா வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்