மாவட்டந்தோறும் 8 கி.மீ தூரத்திற்கு நடைபாதை.! அடுத்த மாதம் துவக்கம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

இன்று கன்னியகுமாரியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள், பொதுமக்கள் , மாணவர்கள் என பலர் ‘நடப்போம் நலம்பெறுவோம்’ எனும் பெயரில் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் 8 கி.மீ தூரம் வரையில் பொதுமக்கள் நடப்பதற்காக மட்டுமே நடைபாதை  உருவாக்கப்பட்டுள்ளது.

அதே போல, தமிழகம் முழுவதும், 38 மாவட்டங்களில் 8 கி.மீ தூரத்திற்கு நடைபாதை தேர்வு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் முன் ஏற்பாடாக கன்னியாகுமாரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டந்தோறும் அமைக்கப்பட உள்ள 8 கிமீ  நடைபாதையில், பாதை இரு புறமும் மரங்கள், ஒவ்வொரு 2 கி.மீ தூரத்திற்கும் இருக்கைகள், தூர கணக்கீடு பதாகைகள், ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஹெல்த் கேம்ப் நடத்தப்படும். அப்போது சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்டோருக்கு இலவச பரிசோதனை, மருத்துவம் வழங்கப்படும். நடை பாதையில் நடப்போருக்கு அரசு சார்பில் குடிநீர், கடலை மிட்டாய், வாழைப்பழம் என சத்தான ஆகாரங்கள் கொடுக்கப்படும். இன்றைய சோதனை நடைபயணம் தொடர்ந்து, அடுத்த மாதம் அல்லது அடுத்த மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இந்த நடைபாதை திட்டம் தமிழகம் முழுவதும் துவங்கப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.