எங்கள் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணைகட்ட முடியாது.!  அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்.!

தமிழக அரசு அனுமதி இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணைகட்ட முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி அமைச்சர் துரைமுருகன் நேற்று பேட்டியளித்துள்ளார். 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. மேகதாது ஆணை கட்டப்பட்டால் தமிழகத்தின் நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு இதற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையை கட்டிய தீருவோம் என கர்நாடக அரசும் இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார். அதில், கர்நாடகா அரசின் நீர் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழக அரசுடன் பேசுவது நடத்த வேண்டும் என்றும் நதிநீர் பங்கீடு குறித்து புதிய தீர்ப்பாயத்தை உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை ( ஜூன் 3 – இன்று) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அதன் பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறினார்.

மேலும், காவிரி நீர் விவகாரத்தை கையாளும் பொறுப்பை காவிரி மேலாண்மை வாரியத்திடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்து விட்டது. எனவே கர்நாடக அரசு கடிதத்தில் குறிப்பிட்டது போல நாங்கள் (தமிழக அரசு) சென்று கர்நாடகாவில் பேச முடியாது. அப்படி பேசினால் அது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த விவகாரத்தை கவனிக்க தான் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே முதலில் தமிழக முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளோம். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி கொடுக்காது என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.