ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது – அமைச்சர் அன்பில் மகேஸ்

Public Exam: ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று மயிலாடுதுறை மாவட்டம் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது.

எங்கு சென்றாலும் மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் தயாராக இருக்கிறார்கள், இன்றே வாக்களிக்கும் வகையில் திமுகவுக்கு மக்களின் ஆதரவு பெருகியுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. தற்போது நான் வந்திருக்கக்கூடிய மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா மக்களவை தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

மத்திய பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எந்த சின்னம் கொடுத்தாலும் திமுக கூட்டணி அமோக வெற்றியை பதிவு செய்யும். தினந்தோறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதாவது குளறுபடியை செய்து வருகிறார். தற்போது  தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குளறுபடி நடந்துள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சரிடம் ரமலான் பண்டிகையின்போது பொதுத்தேர்வு நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது, வரும் ஏப். 12ம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது என கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்