அரசு பள்ளிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது -ராமதாஸ்

அரசு பள்ளிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளன. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.
நீட் தேர்வு முடிவுகள் நாளை  வெளியாக உள்ளன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதற்குள் ஆளுனர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதை எளிதாக எடுத்துக் கொண்டு, நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படாது; அடுத்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்குமானால் அது சமூகநீதிக்கும், ஏழை மாணவர்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக அமைந்து விடும். எனவே, எந்தெந்த வகைகளில் எல்லாம் ஆளுனருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும்; அதன்பிறகு தான் மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிட வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/DrRamadoss/posts/1652407971590149