அரசியானார் மீனாட்சி..!!மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம்..!!வெகு விமர்சையாக நடந்தது..!!

சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மனின் ஆட்சி நேற்று முதல் தொடங்கியது.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.

அதன்படி மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் நடந்தது. இந்த விழாவையொட்டி இரவு 7.50 மணியளவில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்’ எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து இரவு 8 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி, நவரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டது. அப்போது பச்சை நிற பட்டுப்புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும், மகிழம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டன. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

மதுரையில் இன்று முதல்மீனாட்சிஅம்மனின் ஆட்சி தொடங்குகிறது           சிவபெருமானை மீனாட்சி அம்மன் போருக்கு அழைத்த சம்பவத்தை நினைவூட்டும் திக்கு விஜயம் இன்று(வியாழக்கிழமை)மாசி வீதியில் நடக்கிறது. இதையடுத்து நாளை(வெள்ளிக்கிழமை) மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், 28-ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment