இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவை போல் உறுதியான நடவடிக்கை – சசிகலா

மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழக அரசை வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா அறிக்கை 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் விவசாயப் பெருங்குடிமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை உடனே கைவிட வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் கோரியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. திமுக தலைமையிலான அரசும் ஏதோ முதற்கட்ட ஆய்வுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது விவசாயிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இன்றோ மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லி காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க முடிவு எடுத்து இருப்பது முற்றிலும் தவறான நடவடிக்கை. இதன் காரணமாக சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது. விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டு இருக்கும் விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும்.

திமுக தலைமையிலான அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த உறுதியான நடவடிக்கைளை மேற்கொண்டு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்.

மேலும், மத்திய அரசு இதுதொடர்பான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். உணவு உற்பத்திக் களமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என டெஹ்ரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment