‘மீண்டு வருவோம் .. அதற்கான நேரம் இதுதான் ..’ – தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்ததை குறித்து ரிஷப் பண்ட் பேசி இருந்தார்.

நடைபெற்று வெறும் ஐபிஎல் 2024 தொடரில் 16-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன் மூலம் தொடக்கத்தில் களமிறங்கிய சுனில் நரேன் அதிரடி காட்ட, அவரை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேனும் அதிரடியின் உச்சத்தை காட்டினார்கள்.

இதனால், 20 ஓவரில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்கை எட்டுவதற்கு களமிறங்கிய டெல்லி அணி 17.2 ஓவருக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 25 பந்துகளுக்கு 55 ரன்கள் எடுத்திருந்தார்.

டெல்லி அணியின் தோல்வி குறித்து போட்டி முடிந்த பின் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் தோல்வி குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில்,” இன்றைய போட்டியில் பந்து வீச்சில் எங்களுக்கு சற்று சிரமமாக இருந்தது. நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடிருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பேட்டிங் உத்தியைப் பொறுத்தவரை, நாங்கள் அனைவரும் ஆக்ரோஷமாக சேஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தோம், ஆனால் அது முடியாமல் போனது.

மேலும், தோற்றாலும் ஸ்கோரின் அருகில் சென்று தோற்க வேண்டும் என்று விளையாடினோம். பந்து வீச்சிலும் குறைவாக ரன்கள் கொடுக்க முயற்சித்தோம் ஆனால் முடியாமல் போனது. அதை தொடர்ந்து சில தொழில்நுட்பக் கோளாறுகளும் இருந்தன. ஆனால், சில விஷயங்கள் எங்களிடம் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதனுடன். நாங்கள் மீண்டும் ஒருங்கிணைத்து, சிந்தித்து, வலுவாக மீண்டு வருவோம் அதற்கான நேரம் இது தான்”, என்று தோல்வி குறித்து ரிஷப் பண்ட் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.