ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் – திருமாவளவன் ..!

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்தவர் இளவரசன், செல்லம்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா இருவரும் காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திவ்யா வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால் திவ்யாவை வீட்டுக்கு வருமாறு பெற்றோர் அழைத்தனர். திவ்யா வர மறுத்ததால் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், காதல் மனைவியை அடைய இளவரசன் ஐகோர்ட்டை நாடினார் இளவரசன். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது தனது தாயாருடன் செல்வதாக திவ்யா தெரிவித்தார். பின்னர், 2013-ம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி இளவரசன் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இளவரசன் தரப்பினர் இது கொலை என தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று தரும்புரி இளவரசன் நினைவிடத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, தொல்.திருமாவளவன் தனது ட்விட்டரில் ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும். சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் இணையருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் உரிய சட்டமியற்ற வேண்டும். இந்திய, தமிழக ஆட்சியாளர்களுக்கு விசிக இந்நாளில் வேண்டுகோள் விடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan