கொரோனா தடுப்பிற்கு ரூ.3 கோடி வழங்குவதாக ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.இதேபோல் பிரதமர் மோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.ரூ. 50 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்காகவும், ரூ.50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காகவும் அளித்துள்ளார்.ரூ. 50 லட்சத்தை ஃபெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்திற்கும், ரூ.50 லட்சத்தை நடன  சங்கத்திற்கும், ரூ.75 லட்சத்தினை தினக்கூலி தொழிலாளர்களுக்கும் அளித்துள்ளார். ரூ.25 லட்சத்தினை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கும் பிரித்து கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். ஏற்கனவே நடிகர் அஜித் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.