சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. உச்சநீதிமன்றத்தை நாடிய கேரளா அரசு..!

வரலாற்று சிறப்புமிக்க சபரிமலை கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 5,000 ஆக உயர்த்துமாறு உத்தரவிட்ட மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதுகுறித்து தனது மனுவில், சபரிமலை கோயிலில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் இங்கிலாந்தில் ஒரு புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், புதிய வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும், மேலும் அதிக அளவிலான பக்தர்களை கட்டுப்படுத்துவதில் சிரமத்தையும் ஏற்படுத்தும் தனது மனுவில் கேரளா அரசு கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறு 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 1-ம் தேதி இதற்கான புக்கிங் தொடங்கிய நிலையில் 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்கான டிக்கெட்டு புக்கிங் செய்யப்பட்டது. இதனால், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் கோரிக்கை வைத்தது.

இதைத்தொடர்ந்து, சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan