கேரள தங்கம் கடத்தல் கும்பல்! ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று என்ஐஏ விசாரணை! கைதாக வாய்ப்பு!

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று என்ஐஏ விசாரணை.

கடந்த மாதம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தங்கராணி சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு, இந்த கும்பல்களுடன்  தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகளும், சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரித்தனர். இந்த 2 விசாரணையின் போதும் சிவசங்கர் கூறிய பதில்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

 இதனையடுத்து, இன்று கொச்சியில் என்ஐஏ விசாரணைக்காக சிவசங்கர் மீண்டும் ஆஜராக உள்ள நிலையில், விசாரணை நடத்த டெல்லி, ஐதராபாத்தில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் கொச்சி வந்துள்ளனர். முதலில் சுங்க இலாகா, என்ஐஏவிடம் அளித்த பதில்களில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து சிவசங்கரிடம் விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய, சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட அனைவரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் மிக நீண்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை தயாரித்து உள்ளனர். இந்த விசாரணை முடிவில் அவர் சுங்க இலாகா பதிவு செய்த வழக்கில் குற்றவாளி ஆவாரா? அல்லது என்ஐஏ பதிவு செய்துள்ள வழக்கில் குற்றவாளி ஆவாரா? என்பது தெரியவரும். மேலும், இன்றைய விசாரணைக்கு பிறகு சிவசங்கர் கைதானால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.