ஹிஜாப் விவகாரம்:நீதிபதிகளுக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு – முதல்வர் அறிவிப்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என ஒரு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என மேலும் சில கல்வி நிறுவனங்கள் தெரிவித்தன.

முஸ்லிம் மாணவிகள் போராட்டம்:

இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.இந்த விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

மத அடையாள ஆடைகள்:

இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை,மாணவர்கள் சீருடை தவிர மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து உத்தரவிட்டது.இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு செல்ல  அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு  கர்நாடக உயர்நீதிமன்றத்தில்  மனுக்களை தாக்கல் செய்தனர்.

கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு:

Hijab

இந்த வழக்கு விசாரணையில் விசாரணை முடியும் வரை  மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

ஹிஜாப் – அத்தியாவசியமான விஷயம் அல்ல:

மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசியமான விஷயம் அல்ல என தெரிவித்தது.அதன்பின்னர்,ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மாணவிகளில் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்:

hijab ban

இந்நிலையில்,ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் வந்ததால் அவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“ஹிஜாப் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்.நீதிபதிகள் உயிருக்கு மிரட்டல் விடுத்ததாக விதானசவுதா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை முழுமையாக விசாரிக்க இயக்குநர் ஜெனரல் மற்றும் ஐஜிக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மூன்று நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தியும் அடங்குவர். தலைமை நீதிபதியைத் தவிர,நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் மற்றும் காசி எம் ஜெய்புன்னிசா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.