மேகதாது விவகாரம்… ஒரு செங்கல் கூட வைக்க முடியாது.! இபிஎஸ் தீர்மானம் மீது துரைமுருகன் பதில்.!

தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கவனஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்தில் காவிரி மேலாண்மை வாரிய பணிகள் முழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மேகதாது  அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறி இருப்பதற்கு கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் செயல்படுகிறது. மேகதாது அணை திட்டம் சாத்தியமா என்று நீதிமன்றம் தான் கூற வேண்டும். இது குறித்து தமிழக அரசு ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை அமைச்சர், வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோரிடம் கடிதம் கொடுத்து உள்ளது.

மெரினாவில் கலைஞர் நினைவிடம்.. விழாவாக நடைபெறவில்லை.! – முதல்வர் முக்கிய அறிவிப்பு.!

இன்னும் யாரிடமும் கர்நாடக அரசு ஒப்புதலை பெறவில்லை. இன்னும் இந்த திட்டவரைவு நிறைவு பெறவில்லை. மத்திய அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம், காவிரி மேலாண்மை வாரியம் என அனைத்திலும் கர்நாடக அரசு ஒப்புதல் வாங்கினாலும், தமிழக அரசை கேட்காமல் கர்நாடக அரசால் மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது.

தமிழகத்தில் இருக்கும் யாரும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள், எனவே, அதற்கு கர்நாடக அரசு பணம் ஒதுக்கி விட்டது. கர்நாடகா முதலமைச்சர் சட்டப்பேரவையில் அதனை அறிவித்து விட்டார் என பயப்படத் தேவையில்லை. கர்நாடகாவில் பாஜக அரசு வந்தாலும் சரி, கர்நாடக காங்கிரஸ் அரசு வந்தாலும் சரி, அவர்கள் மேகதாது அணை பற்றிய பேசி வருகிறார்கள்.

மேகதாது அணை விவகாரத்தில் உங்களுக்கு ( எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி) எவ்வளவு அக்கறை இருக்கிறதோ, அதே அக்கறை எங்களுக்கும் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க கூடாது. என்று முன்னரே வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை விவகாரத்தை பற்றி பேசுவதில்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

இதனை அடுத்து தாங்கள் கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்தையும், கண்டன தீர்மானத்தையும் சட்டப்பேரவை தலைவர் ஏற்க மறுத்து விட்டார் எனக்கூறி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடுத்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment