கர்நாடக சட்டசபை தேர்தல்: பெங்களூருவில் இரண்டு நாள் பிரதமர் மோடி மெகா சாலைப்பேரணி.!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் மெகா சாலைப் பேரணியை பிரதமர் மோடி இன்று பெங்களுருவில் நடத்துகிறார்.

கர்நாடக சட்டப்பேரவைதேர்தல் நெருங்கிவரும் வேளையில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பாஜகவும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என காங்கிரசும் பலத்த போட்டியில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதிக்கட்டப் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, இன்று மற்றும் நாளை பெங்களுருவில் மெகா சாலைப்பேரணியை நடத்துகிறார்.

கிட்டத்தட்ட 13 தொகுதிகளை உள்ளடக்கிய 26 கி.மீட்டர் தூரம் கொண்ட சாலைப்பேரணியில் பிரதமர் மோடி இன்று, சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் நிற்க அவர்களை நோக்கி கையசைத்த படி சென்றார். முன்னதாக ஒரே நாள் திட்டமிடப்பட்டிருந்த இந்த சாலைப்பேரணி, தற்போது மக்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நாளை (மே 7 ஆம் தேதி), பிரதமர் மோடி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார், முன்னதாக பிரதமர் மோடியின் ஏப்ரல் 30-ம் தேதி மைசூரில் நடந்த சாலைப்பேரணியிலும் ஏராளமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar