டிக் டாக், வீசாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீதுள்ள தடையை நீக்கிய ஜோ பைடன்..!

டிக் டாக், வீசாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீதுள்ள தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அமெரிக்காவில் டிக் டாக், வீ சாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக குற்றம் சாட்டி பாதுகாப்பு கருதி தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆனால் செயலிகள் தொடர்புடைய நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவு செய்தனர். இது தொடர்புடைய வழக்குகள் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த டிக் டாக், வீசாட் உள்ளிட்ட 8 செயலிகள் மீதுள்ள தடையை ரத்து செய்துள்ளார். மேலும், இந்த செயலிகள் பாதுகாப்பு கருதி விரிவான கட்டமைப்பு செய்யப்படும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து  வருகிறார். அரசு ரீதியாக பல அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.