ஜெயலலிதா இல்லம் – அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்ல விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது என தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, ‘வேதா நிலையம் இல்லம் நினைவு இல்லமாக மாற்ற முந்தைய அதிமுக அரசு அவசர சட்டம் பிறப்பித்த பிறகு வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியது.

இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான, தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவித்ததுடன், மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை தீபா, தீபக்கிட்டும் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் 4 ஆண்டுகளுக்கு பிறகு தீபா, தீபக்கால் திறக்கப்பட்டது. இதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், இதுதொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்ல விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்