“எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்துவிட்டார்”- முதல்வர் பழனிச்சாமி!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்துவிட்டார் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. இந்தநிலையில், விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி தர வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே வருகின்றனர்.

அதில் ஒரு பங்காக, அண்மையில் பாஜக மாநில தலைவர் முருகன், தமிழக முதல்வர் பழனிசாமியிடம் நேரில் சென்று அனுமதி கேட்டுள்ளார். மேலும், பாஜக தலைவர்கள் சிலர், சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை விமர்சித்தும் வருகின்றனர்.

இந்தநிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அவரின் ட்விட்டர் பக்கத்தில் “கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் எச்.ராஜாவைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இதன்காரணமாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகனவினரை எச்.ராஜா உரசி பார்க்கக் கூடாது எனவும், எச்.ராஜா பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு டிவீட் போட்டு ஓடி ஒளிந்து கொண்டவர்கள் ஆண்மை உள்ளவர்களா? எனவும், அட்மின் ட்வீட் போட்டார் என்று சொன்னது ஆண்மை உள்ள செயலா? தன் முதுகை முதலில் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தில் கூனி குறுகி மன்னிப்பு கேட்டது ஆண்மை உள்ள செயலா? என அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நாமக்கலில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமாரே காட்டமான பதில் அளித்துவிட்டார் என கூறினார். மேலும் அவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அரசு விழாக்களில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் எனவும், அதற்க்கு யாருக்கும் தடையில்லை என கூறினார்.