Today’s Live: சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல்..! கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சேப்பாக்கத்தில் முதலமைச்சர் :

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டுகளித்து வருகிறார். ஏற்கனவே, சென்னை – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியை முதலமைச்சர் அவரது குடும்பத்துடன் நேரில் வந்து கண்டு ரசித்தார். தொடர்ந்து, இன்றைய போட்டியை காண அவர் சேப்பாக்கம் மைதானம் வந்துள்ளதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

30.04.2023 6:10 PM

அதிகாரிகள் மாற்றம்:

கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் 3 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார். முதலமைச்சரின் கள ஆய்விற்கு பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி, கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர், விழுப்புரம் நகர டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

30.04.2023 5:20 PM

மருத்துவமனைகள் மீது நடவடிக்கை:

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘அத்தகைய மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்’ என்றார். மருத்துவக் கழிவுகளை கையாள்வது தொடர்பான விதிமுறைகளுக்கு மாறாக பொது இடங்களில் கொட்டுவதாக பல தனியார் மருத்துவமனைகளின் மீது குற்றச்சாட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

30.04.2023 4:20 PM

பிரதமர் கோரிக்கை:

இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருப்பது வளர்ந்து வரும் சுற்றுலாத்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மன் கி பாத் 100வது அத்தியாயத்தில் பேசிய அவர், “இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனிதத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நான் என்ற எண்ணத்தில் இருந்து நாம் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது” எனக் கூறினார்.

30.04.2023 1:50 PM

திருப்பதி உண்டியல் திருட்டு:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர், ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகளை ஆடைக்குள் மறைத்து திருட முயற்சி செய்துள்ளார். சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த அதிகாரிகள் ரவிக்குமார் என்ற அந்த ஊழியரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

30.04.2023 11:50 AM

2,000 புதிய பேருந்துகள்:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் பேசிய அவர், ‘புதிய பேருந்துகள் வாங்கி 6 மாத கால சோதனை ஓட்டம் நிறைவடைவதற்குள் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பேருந்துகள் படிப்படியாக கழிவு செய்யப்படும். உடனடியாக கழிவு செய்தால் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து வசதி தடைபடும்’ என்றார்.

30.04.2023 11:00 AM

பரிதாப சம்பவம்:

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், திருமண மண்டபத்தின் சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் தவறி விழுந்த சதீஷ் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருமண மண்டபத்தில் உணவு பரிமாறிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

30.04.2023 09:40 AM

அரசு பள்ளியில் ஒளிபரப்பான ஆபாச படம்:

பஞ்சாப்: கபுர்தலாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர், தனது செல்போனை பயன்படுத்தி பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, எல்.சி.டி திரையில் தவறுதலாக ஆபாச படம் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, ஆசிரியர் ராஜீவ் குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

30.04.2023 07:50 AM

ஜல்லிகட்டு போட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, இன்று மதுரை சத்திரப்பட்டியில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

30.04.2023 07:23 AM

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.