#BREAKING: பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!

தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக அரசு எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என தெரிவித்தார்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10 ஆக இருந்த வரியை 32.90 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது.  ரூ.32.90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூபாய் 336 கோடி வருவாய் குறைந்துள்ளது .

தமிழ்நாட்டில் ஒருவர் ரூ.1 வரி செலுத்தினால் இதில் நான்கு பைசா மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு வரி கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்தால் அதை ஒன்றிய அரசுக்கு விட்டுக் கொடுப்பது போன்றதாகும். வரி பங்கீட்டில் அநீதி நடைபெறுகிறது.

ரூபாய் 98 விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூபாய் 70 ஒன்றிய அரசுக்கும், உற்பத்தி செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூபாய் 20 மட்டுமே கிடைக்கிறது. வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும் என தெரிவித்தார்.

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியின் போது மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள நிலையிலும் ஒன்றிய அரசு அதிக வரி விதித்து வருகிறது. முந்தைய அதிமுக அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது. முந்தைய அதிமுக அரசு கலால் வரியை உயர்த்திய போதே பெட்ரோல் விலை ரூபாய் 100 எட்டும் என எச்சரித்தேன் என தெரிவித்தார்.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய வரியை முறையாக வழங்கவில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
murugan