ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை வாங்குகிறதா அதிமுக? – செல்லூர் ராஜூ பதில்!

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றினால் தீபா, தீபக் வரலாற்றில் நிற்பார்கள் என செல்லூர் ராஜூ வேண்டுகோள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்டது.

மேலும், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தீபக் மற்றும் தீபத்திற்கு வேதா நிலையம் இல்லத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.

இதன்பின் அன்றே வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் போயஸ் கார்டன் இல்லம் தீபா, தீபக்கால் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை பெத்தானியபுரத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாமை முன்னாள் அமைச்சர், எம்எல்ஏயுமான செல்லூர் ராஜூ இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் நிதியை பயன்படுத்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை வாங்குவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா, வாழ்ந்து மறைந்த இடம் அதுதான்.

அதேபோல அந்த இல்லத்தில் வைத்துதான் அவரை உலகத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் சந்தித்தனர். எனவே, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றினால் தீபா, தீபக் வரலாற்றில் நிற்பார்கள்.

அங்கு வந்து இல்லத்தைச் சுற்றி பார்க்க இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் சுற்றுலா பயணிகள் வருவர். இதை கருத்தில் கொண்டு, தீபா – தீபகிற்கு நான் வேண்டுகோள் ஒன்றை வைக்க விரும்புகிறேன். வேதா இல்ல விவகாரத்தில் அதிமுக சார்பாக மேல் முறையீடு செய்வோம் என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்