சாதி, மதம், இனம், மொழி கடந்து, மனிதம் நேசிக்கும் அனைவரும் உறுதியேற்போம் – மநீம

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளை போற்றுவது நம் கடமை என மக்கள் நீதி மய்யம் ட்வீட்.

கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மெய் நிகர் நீதி கடிகாரம், கைப்பேசி செயலி 2.0, டிஜிட்டல் நீதிமன்றம், S3WAAS இணையதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார்.

மறுபக்கம், அரசியல் சாசன தினம் குறித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், ‘இந்திய அரசியல் சாசன தினம்’ குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஜனநாயகம், இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மையை ஆணிவேராகக் கொண்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளில், சாசன வரைவுக் குழுவின் தலைவராகச் செயல்பட்ட அண்ணல் அம்பேத்கரையும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளையும் போற்றுவது நம் கடமை.

மேலும், மாநில உரிமைகள், சமூக நீதி, கருத்துச் சுதந்திரம், சகோதரத்துவம் என அனைத்தையும் அசைத்துப் பார்க்கும் அதிகார கும்பலிடமிருந்து அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்குண்டு. அது சிதைந்துவிடாமல் தடுப்போம் என, சாதி, மதம், இனம், மொழி கடந்து, மனிதம் நேசிக்கும் அனைவரும் உறுதியேற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment