ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 10 பில்லியனாக உயர்வு… ஒவ்வொரு அணியின் பிராண்ட் மதிப்பு எவ்வளவு? முதல் 10 அணிகள்…

அடுத்தாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களும் அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், 2023 சீசனுக்குப் பிறகு ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 10.7 பில்லியனாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மொத்த பிராண்ட் மதிப்பு 2023 சீசனுக்குப் பிறகு 28% அதிகரித்து, 10.7 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.89,232 கோடி) எட்டியுள்ளது என்று பிராண்ட் மதிப்பீடு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபைனான்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி பார்த்தால், 2008 இல் தொடங்கப்பட்டதில் இருந்து இந்தியன் பிரீமியர் லீக்கின் பிராண்ட் மதிப்பு 433% அதிகரித்துள்ளது. போட்டிகளை காண  பார்வையாளர்களின் எண்ணிக்கை, இணையதளம் உள்ளிட்ட பிற வகையில் ஐபிஎல் போட்டிகளை காணுவது மற்றும் மீடியா கூட்டாண்மை ஆகியவற்றை கொண்டு வருடாந்திர கிரிக்கெட் போட்டியின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா? இன்று 3வது போட்டியில் பலப்பரீட்சை!

அதன்படி, ஐபிஎல் பங்கேற்றுள்ள 10 அணிகளில், முதலில் 87 மில்லியன் டாலர் மதிப்புள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் அணியாக திகழ்கிறது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 81 மில்லியன் டாலர் மதிப்புடன் மிகவும் மதிப்பிக்க பிராண்ட் அணி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கேவை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 78.6 மில்லியன் டாலர், பெங்களூரு அணி 69.8 மில்லியன் டாலர் மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

பிராண்ட் மதிப்பைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் தான் அதிக லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த அந்த அணி இந்த முறை 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு அதன் பிராண்ட் மதிப்பு 38% (65.4 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது. இதுபோன்று, டெல்லி அணி 64.1 மில்லியன் டாலர், ராஜஸ்தான் அணி 62.5 மில்லியன் டாலர், ஐதராபாத் 48.1 மில்லியன் டாலர், லக்னோ 47 மில்லியன் டாலர் மற்றும் பஞ்சாப் 45.3 மில்லியன் டாலர் மதிப்புடன் மதிப்புமிக்க பிராண்ட் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்