சர்வதேச மகிழ்ச்சி தினம்: சோகங்களை அழியுங்கள் வாய்விட்டு சிரியுங்கள் – சார்லி சாப்ளின்.!

உலகில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. 2012ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியிலிருந்து உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பணம்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரணி என்றால், பணம், செல்வம், ஆசை, அரச பதவி என எல்லாவற்றையும் துறந்து மன மகிழ்ச்சியையும் வாழ்வின் நோக்கத்தையும் தேடியதற்கான காரணம் என்ன? இன்று கூட பொருளாதாரம் சார்ந்த வசதிகளில் பெரும் நிறைவு கொண்ட நோய்வாய்ப்பட்டவர்களிடமும், முதியோர் இல்லத்திலுள்ளவர்களிடமும் உங்களிடம் மகிழ்ச்சி உள்ளதா? என்று கேட்டால், இல்லை என ஒப்புக்கொள்வார்கள். எனவே மகிழ்ச்சிக்கு பொருளாதாரமும் பணமும் அவசியமல்ல.  

இன்று வேலை கிடைத்தது, இன்று புதுவீடு கட்டினேன், இன்று கார் வாங்கினேன், இன்று புது உடை உடுத்தினேன் என அன்றன்று கிடைத்த, நம்மால் முடிக்கப்பட்ட நிகழ்வுகள் அந்நாளின் மகிழ்ச்சி. அடுத்த நாளோ அடுத்த வாரமோ அவை பெரும் மகிழ்வை தருவதில்லை. உதாரணமாக, அன்று வரை கார் வாங்க வேண்டும் என்பதை என் மகிழ்ச்சிக்கு உரிய நிகழ்வாக பார்த்த நாம், கார் வாங்கிய பிறகு வேறு ஒரு இலக்கால் மகிழ்ச்சியை அடைய நினைக்கிறோம். இதனால் மகிழ்ச்சிக்கு இறுதி இலக்கே இல்லை.

சோகங்களை அழித்தால்தான் மகிழ்ச்சி பிறக்கும் என்று பிறர் மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்தவர் சார்லி சாப்ளின். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் மக்களை நோக்கி ஒரு ஜோக் ஒன்றை சொன்னார். அப்போது அரங்கமே சிரித்து அதிர்ந்தது. திரும்பவும் அதே ஜோக்கை 2ம் முறை சொன்னார், பாதி பேர் சிரித்தனர். 3வது முறையும் அதே ஜோக்கை சொன்னபோது அரங்கம் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் சாப்ளின் மக்களை நோக்கி சொன்னார், ஒரு சிறிய ஜோக் முதலில் உங்களை சிரிக்க வைத்தது. 2வது முறையும் ஏற்கனவே சொன்னது தானே என்று பெரிதாய் ஏற்றுக்கொண்டு சிரிக்கவில்லை. அப்படியிருக்க சோகம் ஒன்றுதானே? அதைமட்டும் ஏன் திரும்பத் திரும்ப ஏற்றுக்கொள்கிறீர்கள்? சோகங்களை அழியுங்கள் வாய்விட்டு சிரியுங்கள் என்றார். 

தினசரி நம் வாழ்வில் எவ்வளவு மன நிறைவுடன் இருக்கிறோம், நேர்மறை எண்ணத்துடன் இருக்கிறோம் என்று நம்மால் உணர முடிந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியையும் உணரமுடியும். வாழ்வில் சுறுசுறுப்பு, தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான மனநிலை, சுகாதாரமான சுற்றுப்புறம், நகைச்சுவை உணர்வு, உண்மையான உறவுகள், அளவான செல்வம், பிறர் நலம் பேணுதல், போன்ற எல்லா காரணிகளும் மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன. அப்படியாகப்பட்ட மகிழ்ச்சிதனை தன் வாழ்வில் பெறுவது மற்றுமின்றி பிறரையும் மகிழ்விப்பதுதான் மகிழ்வின் உச்சமே அனைவர்க்கும் சர்வேதேச மகிழ்ச்சி தின வாழ்த்துக்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்