சென்னை துறைமுக அதிகாரி என கூறி 45 கோடியை மோசடி செய்த இந்தியன் வாங்கி மேலாளர்!

சென்னை துறைமுக அதிகாரி எனக்கூறி 45 கோடி ரூபாயை மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளர் உட்பட மூவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் 500 கோடி ரூபாயை கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி நிலையான வைப்பு நிதியாக செலுத்தியுள்ளனர். செலுத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்பு கனேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குனர் என கூறிக்கொண்டு வைப்புக் கணக்கில் உள்ள 100 கோடி ரூபாயை இரண்டு நடப்பு கணக்குகளில் 50 கோடி ரூபாய் ஆக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். சென்னை துறைமுகத்தின் பரிந்துரை கடிதம், அனுமதி சான்று ஆகியவற்றை போலியாக தானே தயாரித்துக் கொண்டு மோசடி கணக்குகளை தொடங்கியதாகவும் கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் சேர்ந்து முதற்கட்ட நடப்பு கணக்குக்கு 50 கோடி ரூபாயை மாற்றி, அதிலிருந்து 45 கோடி ரூபாயைப் பல்வேறு வங்கிகளுக்கு மாற்றியுள்ளனர். இதனால் வங்கி ஊழியர்களுக்கு எழுந்த சந்தேகத்தால் அடுத்த 50 கோடி ரூபாயை மாற்ற கணேஷ் நடராஜன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் வந்தபோது அதிகாரிகள் உதவியுடன் கோயம்பேடு காவல்துறையினரை வைத்து இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

மோசடியில் மத்திய அரசு ஊழியர்களும் தொடர்பில் இருப்பதால் சிபிஐ புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சென்னை துறைமுக அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த கனேஷ் நடராஜன் மணிமொழி மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் சிபிஐ வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளனர். மேலும் இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

author avatar
Rebekal