இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு… இந்தியா 1 விக்கெட் இழந்து 62 ரன்கள் முன்னிலை..!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய  இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் டிம் பெயின் மட்டும் சிறப்பாக விளையாடி கடைசிவரை 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றார். இந்திய தரப்பில் அஸ்வின் 4, உமேஷ் யாதவ் 3, பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆனால், முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் பிருத்வி ஷா ஆட்டம் தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா களமிறங்கினார்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்து உள்ளனர். தற்போது களத்தில் மயங்க் அகர்வால் 5 ரன்னும், பும்ரா ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதனால் இந்திய அணி 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

author avatar
murugan