வருமான வரி; காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு அறிவிப்பு.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்படும். இந்த ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை கடைசி தேதியான ஜூலை 31க்கு பிறகு நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என்று வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார். தேதி நீட்டிக்கப்படும் என்பது வாடிக்கையான ஒன்று தான் என்று மக்கள் நினைத்தார்கள்.

அதனால், ஆரம்பத்தில் ரிட்டர்ன்களை நிரப்புவதில் கொஞ்சம் தாமதம் செய்தார்கள். ஆனால் தற்போது, நாளொன்றுக்கு 15-18 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்படுவதாகவும் கூறினார். 2021-22 நிதியாண்டில் ஜூலை 20-ஆம் தேதிக்குள் 2.3 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் (2020-21), டிசம்பர் 31, 2021 நீட்டிக்கப்பட்ட நிலுவைத் தேதிக்குள் சுமார் 5.89 கோடி ஐடிஆர்கள் (வருமான வரி அறிக்கைகள்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment