முகக்கவசம் அணியாததற்காக சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல்..! சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கண்டனம்..!

சிங்கப்பூரில் முகக்கவசம் அணியாததால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் வன்மையாக கண்டித்துள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய்,ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை விஷ்ணுபாய் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது,ஒரு நபர் அருகில் வந்து விஷ்ணுபாய் தனது முகக்கவசத்தை அணியவில்லை என்று மார்பில் எட்டி உதைத்துள்ளார்.

இதுகுறித்து,விஷ்ணுபாயின் மகள் பர்வீன் கவுர் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,”என்னுடைய அம்மா சோவா சூ காங் டிரைவில் நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது,ஒரு நபர் என் அம்மாவின் அருகில் வந்தார்.அப்போது,என் அம்மா அவரைப் பார்த்து “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் “என்று கூறினார்.ஆனால்,அந்த நபர் என் அம்மா முக்கவசம் அணியவில்லை என்று இனவெறியுடன் அவதூறாகப் பேசி மார்பில் எட்டி உதைத்தார்”,என்று கூறினார்.

சிங்கப்பூரில் கொரோனா காரணமாக பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.இருப்பினும்,உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்யும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,முகக்கவசம் அணியவில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கூறியதாவது,”பாதிக்கப்பட்டவர் ஒரு சிங்கப்பூர்காரராக இல்லை என்றாலும்,இனவெறி தாக்குதல் நடத்தியது தவறான மற்றும் வெட்கக்கேடான செயலாக உள்ளது.இந்த செயலை நான் வன்மையாக கண்டிகிறேன்.இது நமது ஒற்றுமையான சமூகத்திற்கு எதிரானது.மேலும்,நமது சர்வதேச நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கிறது.எனவே,சம்மந்தப்பட்டவர்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும்”,என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து,சிங்கப்பூரில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களும் இந்த தாக்குதலைக் கண்டித்தனர்.

சிங்கப்பூரின் உள்ளூர் மக்கள் தொகையில் பாதி பேர் சீனர்களாக உள்ளனர்,அதைத் தொடர்ந்து 15% மலாய்க்காரர்களும் 7.5% இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.