மனதை தொட்ட சம்பவம்..!கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 லட்சம் நன்கொடை வழங்கிய பீடி தொழிலாளி…!

கேராளாவில்,ஊனமுற்ற பீடி தொழிலாளி ஒருவர் கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 லட்சம் நன்கொடை வழங்கிய நிலையில்,அதனைப் பாராட்டி பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல காரணத்திற்காகவே இருந்தாலும் பணத்தை நன்கொடையாக கொடுக்க பெரும்பாலான மக்கள் நினைப்பதில்லை.ஆனால் ஒரு சிலர் மட்டுமே தங்களது சேமிப்புகளை பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது தொண்டு நிறுவனங்களுக்கோ கொடுக்க தயாராக இருப்பார்கள்.அந்த வகையில்,கேரள மாநிலம்,கண்ணூரைச் சேர்ந்த ஊனமுற்ற பீடி தொழிலாளி ஒருவர்,தான் மொத்தமாக சேமித்த ரூ.2,00,850லிருந்து ரூ.2 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய சம்பவம் பலரது மனதையும் தொட்டுள்ளது.

ஏனெனில்,வங்கி ஊழியர்கள் முதலில் ரூ.1 லட்சம் அனுப்புமாறும் மீதமுள்ளவற்றை பின்னர் அனுப்புமாறு பீடி தொழிலாளியிடம் பரிந்துரைத்தபோது,அவர் பிடிவாதமாக இரண்டு லட்சத்தையும் ஒரே நேரத்தில் அனுப்ப விரும்பினார்.மேலும்,தனது முடிவு உறுதியானது என்றும்,இது முதல்வரின் பொது வேண்டுகோள் என்றும் கூறினார்.அதுமட்டுமல்லாமல் தனது பெயரை வெளியிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன்,பீடி தொழிலாளிக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”சி.எம்.டி.ஆர்.எஃப்-கணக்கிற்கு நன்கொடைகள் கொடுப்பது பற்றி இதயத்தை நெகிழ செய்யும் பல கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.இதில் பீடி தொழில் செய்யும் முதியவர் ஒருவர் தனது சேமிப்பு வங்கிக் கணக்கில் உள்ள ரூ.200,850 லிருந்து ரூ.2 லட்சத்தை நன்கொடை அளித்தார்.மேலும்,அந்த முதியவர் தனது பணம் சக மனிதர்களின் வாழ்க்கையை விட பெரிதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.ஒருவருக்கொருவரின் இந்த அன்புதான் நம்மை ஒன்றாக சேர்க்கிறது.மீண்டும்,உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி”,என்று கூறியுள்ளார்.