‘இனிமே வீட்டுக்கு வரமாட்டேன், குட்பை’ – தடை செய்யப்பட்ட பப்ஜி கேமால் பறிபோன 10 லட்சம்…!

தடைசெய்யப்பட்ட பப்ஜி  கேமை விளையாட, தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை பயன்படுத்திய சிறுவன். 

இளைஞர்களை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்தின் மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பப்ஜி ஆன்லைன் கேமானது தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் சிலர் சட்டவிரோதமாக விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த விளையாட்டால் பலர் பணத்தை இழந்தாலும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டிற்கு தெரியாமல் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இந்த கேம் விளையாட தேவையான ஐடியை உருவாக்க, அச்சிறுவன் அவரது தாயாரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார். பெற்றோர் சிறுவனை சரியாக கவனிக்காத நிலையில், அச்சிறுவன் எப்போதுமே பப்ஜி விளையாடுவதிலேயே கவனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் அவரது தாயார் தனது வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளதை அறிந்து கொண்டார். இதுகுறித்து, என்னவென்று விசாரித்த போது அவரது மகன் அவருக்கு தெரியாமல் 10 லட்சத்தை விளையாட்டில் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுவனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன், ‘இனிமேல் நான் வீட்டுக்கு வரமாட்டேன், குட்பை’ என கடிதம் எழுத்துவைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். கடிதத்தை பார்த்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான குழு சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் அச்சிறுவனின் தொலைபேசி எண்ணை வைத்து, 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன்பின், போலீசார் சிறுவனுக்கு ஆலோசனை கொடுத்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.