இனி தலைமை தேர்தல் ஆணையரை இவர்கள் தான் நியமிப்பார்கள் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரதமர் உள்ளிட்டோர் கொண்ட குழு மூலமே தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் புதிய விதி.

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, இனி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படும்.

தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் கோரிய வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதை போலவே பதவி நீக்கம் செய்யும் முறையும் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்க வேண்டும், நியாயமான மற்றும் சட்டபூர்வமான முறையில் செயல்படுவது கடமையாகும். ஜனநாயகத்தில், தேர்தலின் தூய்மை பேணப்பட வேண்டும், காக்கப்பட வேண்டும், இல்லையெனில் அது பேரழிவை தரும், கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்திய தேர்தல் நடைமுறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment