“17 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவு”- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!

  • தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் உருக்காலை வளாகத்தில் மேலும் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

  • “தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது,புதிதாக தொற்று பரவாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.
  • இருப்பினும்,தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக,தற்போது 17 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.
  • ஆனால்,11 மாவட்டங்களில் இன்னும் தொற்றின் தாக்கம் குறையவில்லை. எனவே,தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் மக்கள் கவனக் குறைவாக இருக்க கூடாது.கொரோனா அறிகுறிகள் வந்தவுடனே உடனடியாக உரிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.அவ்வாறு,செய்தால் 10 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைய முடியும்.
  • தமிழகத்தில் அடுத்த அலையை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை  முதல்வர் அமைத்துள்ளார்.இந்தக் குழுவானது கொரோனா பரவல் குறித்து கண்காணித்து வருகிறது.
  • மேலும்,கொரோனா மற்றும் கொரோனா அல்லாத இறப்பு நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
  • மே மாதம் முதல்,இரண்டாவது வாரத்தில் பெரும் சவாலாக இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்கி,தற்போது நாள் ஒன்றுக்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது”,என்று தெரிவித்தார்.