நடுத்தர மக்களே உஷார்..! இந்த 4 பழக்கங்களை செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்..

Habits : இன்றைய நவீன உலகில் நமக்கு முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றால், நாம் அதள பாதாளத்தில் வீழ்வதற்கு 1 லட்சம் வழிகள் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அது அதள பாதாள வழி என்று தெரியாமலே  நாம் அதற்குள் ஆழமாக சென்று கொண்டு இருப்போம்.

இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்குமே முன்னேறி ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை விரைவில் மாற வேண்டும் என அளவான கடன் , சிறிய சேமிப்பு ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான வேலையில் மாத சம்பளத்தில் ஓடி கொண்டு இருப்போம். அப்படி இருக்கும் நம்மிடம் சில பழக்கங்கள் நம்மிடம் வரும். அது நம்மை இன்னும் பின்னோக்கி தள்ளிவிடும் என தெரியாமல் அதனை செய்து கொண்டு இருப்போம். அது என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

பணம் சம்பாதிக்க எளிய வழிகள் :

எப்படியேனும் பெரிய அளவில் அதிர்ஷ்டம் வந்துவிடாதா என தேடிக்கொண்டு இருக்கும் நபர்களை தேடி வரும் சில தூண்டில் தான்  “பணம் சம்பாதிக்க எளிய வழிகள்” எனும் வசனத்தோடு வரும் சில விளம்பரங்கள், விளையாட்டில் யார் ஜெயிப்பார்கள் என கூறுங்கள் 1 கோடி வெல்லுங்கள், எந்த கம்பெனி பங்குகள் உயரும் என கணித்து முதலீடு செய்யுங்கள் பணத்தை அள்ளுங்கள் , விளம்பரம் பார்த்தால் மட்டும் போதும் காசு வரும் என கவர்ச்சி விளம்பரத்தால் பணத்தை இழந்து கடனாளியானவர்கள் இங்கு ஏராளம்.

இதனை கருத்தில் கொண்டு உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும், எதனை புதியதாக கற்க வேண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும் என பலமுறை ஆராய்ந்து செயல்படுங்கள்.

எளிதில் கடன், EMI :

இப்போது எதற்கெடுத்தாலும் நமக்கு எளிதில் கடன் கிடைத்து விடுகிறது. சாதாரண அயர்ன் பாக்ஸ் முதல் வீடு, கார், பைக் என அனைத்தும் EMIயில் கிடைத்து விடுகிறது. எளிதில் கிடைக்கிறது என நாமும் அதனை வாங்கி பயன்படுத்தி விடுகிறோம். ஒரு பொருளை நாம் வாங்கும் முன் உண்மையில் இது நமக்கு அத்தியாவசிய தேவை தானா என அறிந்து தேவையெனில் மட்டுமே வாங்க  வேண்டும். கூடுமான வரையில் அதிக வருடங்கள் செல்லும் கடன்களை தவித்துவிடுங்கள்.

வீடு, கார் என தேவை கருதி நீண்ட நாட்கள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், கண்டிப்பாக உங்கள் மீது அதிக காப்பீட்டிக்கு இன்சூரன்ஸ் போட்டுவிடுங்கள். அது உங்களுக்கும், உங்கள் குடுமபத்திற்கும் பெரிய பாதுகாப்பாக இருக்கும்.

ஆன்லைன் ஷாப்பிங் :

ஆன்லைன் ஷாப்பிங் பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. முன்னர் நமக்கு தேவையான பொருளை தேடி நாம் கடைவீதிக்கு செல்வோம். தற்போது நமக்கு தேவையற்ற பொருளை வாங்கிவிட்டீர்களா என நமது செல்போன் வழியே கடைவீதி நம்மை வற்புறுத்துகிறது. முதலில் ஆஃபர்களை அள்ளிவீசிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள், தற்போது நமது பயன்பாட்டை பார்த்து அதனை பெரும்பாலும் குறைத்துவிட்டனர். விற்காத பொருட்கள் மீது அதிக தள்ளுபடி என கவர்ச்சி காட்டி நம்மிடம் விற்றுவிடுகிறார்கள்.

குறிப்பிட்ட தொகைக்கு மேலே வாங்கினால் தான் ஆஃபர் என கூறுகிறார்கள். உடனே நமக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி ஆஃபர் பெற்று விட்டோம் என நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். ஆனால் உண்மையில், நமக்கு தேவையற்ற பொருட்களை நம்மிடம் விற்று அவர்கள் தான் நம்மை ஏமாற்றிவிடுகின்றனர்.

படிப்பில் அதிக முதலீடு :

இந்த விஷயத்தை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை. நான் தான் அதனை படிக்கவில்லை. நீ அதனை படிக்க வேண்டும் என கூறி , ஒருவருக்கு பிடிக்காத ஒரு படிப்பை பெற்றோர்களின் விருப்பத்தின்படி அதிக செலவீனம் செய்து படிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

உண்மையில் தற்போதைய போட்டி காலகட்டத்தில் ஒருவருக்கு பிடித்த துறையில் அவர் அறிவை வளர்த்து கொண்டால் மட்டுமே அவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். அதற்கு பெரும் சாட்சி நம் நாட்டில் ஆண்டு தோறும், மத்திய அரசாங்க தேர்வு எழுதுவோர், நீட் தேர்வு எழுதுவோர், IIT நுழைவு தேர்வு எழுதுவோர் பயிற்சி பெற்று தேர்வு எழுதுபவர்களின் சராசரி எண்ணிக்கை மட்டும் 40 லட்சமாம். இதில் இந்த துறைகளை பிடித்து படித்த சில ஆயிரம் பேர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் என்பதே உண்மை.

மேலும், நமது நாட்டில் சராசரியாக ஒரு குடும்பத்தில் கல்விக்காக மட்டுமே 15 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்கிறார்கள். அதில் பெரும்பாலும் கடன்கள் தான். அதனால், குழந்தைகளுக்கு என்ன துறை பிடிக்கின்றதோ அதில் திறமையை வளர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துவிட்டாலோ வெற்றி நிச்சயம் தான்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment