“எந்நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்!”-பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் அக். 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளடவைகள் மூடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது.

அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகள், திரையரங்குகள் திறக்கப்படும் எனவும், பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார். அந்த வழிகாட்டு நெறிமுறைகளில்,

  • பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்றால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கபடுவார்கள்.
  • தங்களுக்குத் தேவையெனில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.
  • பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், பள்ளி உபகரணங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.
  • பள்ளியில் மாணவர்கள் எந்நேரமும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.
  • அதேபோல் தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்.
  • பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த தகவல் பதாகைகள், பேனர்களை கட்டாயமாக வைக்க வேண்டும்.
  • பள்ளிகளில் அவசரகால உதவிக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழுக்களை அமைக்க வேண்டும்.
  • பள்ளியில் பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை போக்கும் வகையில், சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு வழங்க வேண்டும்.
  • பள்ளியில் மாணவர்கள் உட்பட யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி பின்பற்ற வேண்டும்.