இனி இந்த ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் கிடையாது?

கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்றவற்றை செப்டம்பர் 27 இல் இருந்து தடுக்க உள்ளது.

பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மூன்று அல்லது நான்கு வருட பயன்பாட்டிற்குப் பிறகு புதிய போன்களுக்கு மாறுகின்றனர். சிலர் பயன்படுத்தும் போன் வீணாகும் வரை பயன்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களில் ஒருவராக இருந்தால் இது உங்களுக்கு  முக்கியமான பதிவாக இருக்கும். ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் போன்ற பல முக்கிய பயன்பாடுகளை கூகுள் தடுக்க இருக்கிறது.

வாட்ஸ்அப் ஏற்கனவே பழைய ஆண்ட்ராய்டு போன்களில் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. டிசம்பர் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு 2.3 இன் சேவைகளை நிறுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, பிப்ரவரி 2017 இல் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 2.3 இல் இயங்க கூடிய எந்த கைபேசிகளிலும் கூகுள் பே வேலை செய்வதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது வரும் ​​செப்டம்பர் 27 முதல் கூகுள் கணக்கு மூலம் ஆண்ட்ராய்டு 2.3 இல் பயனர்கள் உள்நுழைவதைத் தடுக்கும் திட்டத்தை கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது.

தங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்நுழைய முயற்சிக்கும் பயனர்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் பிழையைப் பெறுவார்கள். மேலும், அவர்கள் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்தாலும், பிழையாகவே வரும். பயன்படுத்தும் போன் மெனுவில் கூகுள் காலெண்டர் அல்லது ஜிமெயில் கணக்கைச் சேர்க்க முயற்சி செய்தாலும் மீண்டும் அதே பிழை ஏற்படும். மேலும், யூடியூப், கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், கூகுள் கேலெண்டர் போன்ற கூகுள் கணக்கை நம்பியிருக்கும் பிற பிரபலமான கூகுள் ஆப்ஸும் வேலை செய்வதை நிறுத்திவிடும்.

இந்த பயன்பாடுகளைப் நீங்கள் பயன்படுத்த வேண்டும் எனில் ஆண்ட்ராய்டு 3.0 க்கு மாறியாக வேண்டும். எனவே நீங்கள் ஒரு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. இருப்பினும் நீங்கள் ஒரு புதிய போன் வாங்க முடியவில்லை எனினும், கூகிள் ஒரு சிறிய பயன்பாட்டை வழங்குகிறது. ஆண்ட்ராய்டில் பிரௌசரை பயன்படுத்தி கூகுள் சேவைகளில் சிலவற்றை நீங்கள் அணுக முடியும். இருப்பினும், உங்கள் கைபேசியில் உள்ள அனைத்து கூகுள் பயன்பாடுகளும் நிரந்தரமாக தடுக்கப்படும்.